சிவபெருமான் திரிபுராந்தகர்களை அழிக்க தேவர்கள் அளித்தத் தேரில் ஏறிப் புறப்பட்டார். தேவர்கள் சிவபெருமானுக்கு தேரை அளிக்கும்முன் விநாயகப் பெருமானை வணங்காமல் கொடுத்தால் தேரின் அச்சு முறிந்தது. பின்னர் விநாயகரை வழிபட சரியானது. தேரின் அச்சு முறிந்து விழுந்த இடமாதலால் 'அச்சிறுப்பாக்கம்' என்று வழங்கப்படுகிறது. இத்தல மூலவர் 'அச்சீஸ்வரர்' என்றும் அழைக்கப்பட்டு, தற்போது 'ஆட்சீஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றது.
மூலவர் 'ஆட்சீஸ்வரர்', 'பாக்கபுரீஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன் சிறிய லிங்க வடிவில் அருள்பாலிக்கின்றார். இவர் பிரம்ம(அடிப்)பாகம் இல்லாமல் சதுர வடிவ ஆவுடை மற்றும் பாணத்துடன் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'இளங்கிளியம்மை', 'சுந்தர நாயகி' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
மற்றொரு மூலவர் 'உமைஆட்சிபுரீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அவரது பின்புறம் சிவபெருமான், பார்வதி திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். அம்பாள் 'பாலசுகாம்பிகை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், பெருமாள், தாயார், அனுமன், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பல சன்னதிகள் உள்ளன.
கௌதமர், கண்ணுவ முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|